* ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு
* மூலப்பொருளை அரசே உற்பத்தி செய்ய கோரிக்கை
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில், வேடப்பர் கோயில் என ஆன்மீக தலங்களும், சப்-கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகம் நகரப்பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றுப்புற பகுதியில் உள்ள நுற்றுக்கணக்கான கிராம மக்கள் விருத்தாசலம் நகரத்திற்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். பல சிறப்புகளை உடைய இந்நகரத்தில் தான் தமிழகத்தில் வேறு எங்கேயும் இல்லாத வகையில் செராமிக் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டையானது தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. ஆனால் கடந்த 2018 நவம்பர் மாதம் முதல் இந்த செராமிக் தொழிற்சாலையானது தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) கீழ் இயங்கி வருகிறது.
இந்த தொழிற்பேட்டையில் 64 தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன. இதில் 4 தொழிற்கூடங்கள் செயல்படவில்லை. இங்கு பல்வேறு வடிவ அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகள், பீங்கான் பீஸ் கேரியர், பைப், உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு பயன்படக்கூடிய பல வகையான பீங்கான் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்த தொழிற்பேட்டை வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் விருத்தாசலத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பீங்கான் பொருட்களை வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனர். இந்த செராமிக் தொழிற்பேட்டையை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் மூடுவிழாவை நோக்கிச்செல்லும் அவல நிலையில் உள்ளது.
பீங்கான் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காததாலும், சுடுசூளைக்கு தனியார் நிறுவனங்களை நம்பியே இருப்பதாலும், உற்பத்தி பொருட்களை அதிக விலைக் கொடுத்து உற்பத்தி செய்யும்போது அதிக விலைக்கு பெற்றுக் கொள்ள வியாபாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால் வந்த விலைக்கு தள்ளிவிடும் நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். இதேபோல தொழிற்பேட்டையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்காததால் பாதுகாப்பின்மை குறைபாடுகளால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்தவெளி கூடாரமாக தொழிற்கூடங்கள் அமைந்திருப்பதால் அவ்வப்போது மதுபிரியர்களின் கூடாரமாக தொழிற்கூடங்களின் வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் விரும்பத்தகாத சமூக விரோத செயல்களும் இப்பகுதியில் அரங்கேறுகின்றன.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் காமராஜர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டையானது, மூடுவிழாவை நோக்கி செல்கிறது. தொழிலும் நலிவடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துவரும் தமிழக அரசு, பீங்கான் தொழிற்சாலை அழிவுக்கு இடம்கொடுக்காமல் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த தொழிற்பேட்டையை நேரடி கவனத்தில் கொண்டு வந்து தொழிற்பேட்டைக்கு தேவையான மூலப்பொருட்களை அரசே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அரசே குறைந்த விலைக்கு சுடுசூளையில் வைத்து சுட்டுத்தர வேண்டும். உற்பத்தியான பொருட்களுக்கு சந்தை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
கண்காட்சிகள் நடத்தி இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பலதரப்பு மக்களையும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசே உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர். இதுபோன்று நடந்தால் மட்டுமே இந்த தொழிற்பேட்டை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும். பல குடும்பங்களின் வாழ்வில் விளக்கெரியும். இல்லையென்றால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இந்த செராமிக் தொழிற்பேட்டையை மேம்படுத்தி விருத்தாசலத்தில் மிகப்பெரிய தொழில் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோஷ்டி பூசல்களால் மூடப்படும் சுடு சூளை
பீங்கான் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை கடந்த காலங்களில் அரசே உற்பத்தி செய்து கொடுத்தது. ஆனால் இந்நிறுவனம் மூடப்பட்டதால் தற்போது தனியாரிடம் அதிக விலை கொடுத்து மூலப்பொருட்களை பெற்று தொழில் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி மூலப்பொருட்களை பயன்படுத்தி பீங்கான் பொருட்களை தயாரித்த பிறகு அதனை சுடு சூளை சுரங்கத்தில் வைத்து சுட வேண்டும். இதற்கான சுரங்க சூளையையும் அரசே நடத்தி வந்தது. ஆனால் அந்த சுரங்க சூளையும் கடந்த 2001ல் மூடப்பட்டது.
இதனால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் அதிக விலை கொடுத்து பீங்கான் பொருட்களை சுட்டு விற்பனை செய்த நிலையில் தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தியாளர்கள் ஒன்றுசேர்ந்து சுயஉதவி குழு சங்கம் நிறுவி அதன் மூலம் சுரங்க சுடு சூளையை கடந்த 2013ல் அமைத்தனர். இங்கு விலை குறைவு என்பதால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வந்தனர். தற்போது அங்கு ஏற்பட்ட கோஷ்டி பூசல்களால் கடந்த 2 ஆண்டுகளாக சுரங்க சூளையை அவ்வப்போது திறப்பதும், மூடுவதுமான தொடர் கதையாக நீடிக்கிறது. இது உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ1,000க்கு விற்பனையாகும் ஒரு டன் வெள்ளை மண்
சிப்கோ தொழிற்பேட்டை செராமிக் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த கோபால் கூறும்போது, செராமிக் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் செராமிக் தொழில் கல்லூரியில் உள்ள டிப்ளமோ படிப்பினை டிகிரியாக உயர்த்த வேண்டும். இந்த தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மண்ணை ஆய்வு செய்யும் கூடத்தை, தொழிற்பேட்டை வளாகத்திலே அமைக்க வேண்டும். தினமும் 60 டன் மண் பயன்படுகிறது. ஆரம்பிக்கும்போது கட்டப்பட்ட 69 யூனிட்டுகள் தற்போது வரை உள்ளன. இவற்றுக்கான வாடகை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
வாடகைக்கு நடத்தப்படும் கடைகளை அவரவருக்கு சொந்தமாக தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் நீண்ட காலமாக இத்தொழிலில் ஈடுபடுபவர் பயனடைவர். செராமிக் தொழிலுக்கான வெள்ளை களிமண் முழுவதும் என்எல்சியில் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் தர மறுக்கிறார்கள். இதனால் தனியாரிடம் ஒரு டன் ரூ1,000 கொடுத்து வாங்குகிறோம். இந்த செராமிக் பொருட்கள்தான் சேலம் இரும்பாலைக்கும் செல்கிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த செராமிக் தொழிற்பேட்டை வளர்ச்சி காணும் என்றார்.
The post விருத்தாசலத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது; நலிவடைந்துள்ள செராமிக் தொழிற்பேட்டை: மீண்டும் புத்துயிர் பெறுமா? appeared first on Dinakaran.