நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் 50 ஆண்டுக்கு பின்னர் தேரோட்டம் இன்று (10ம் தேதி) நடந்ததுது. இதில் சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நெல்லையை அடுத்துள்ள சீவலப்பேரியில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மணிமண்டபம் சித்திர சபைக்குரிய வேலைப்பாடுகளை கொண்டதாகும். இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேரோட்ட நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். காலப்போக்கில் தேர் சேதமடைந்த நிலையில், பராமரிப்பு இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் புதிதாக தேரை சீரமைத்து தேரோட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு ரூ.35 லட்சம் மதிப்பில் 12 அடி அகலம், 32 அடி உயரத்தில் தேர் செய்யும் பணிகள் நடந்தன. புதிய தேர் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இவ்வாண்டு பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சீவலப்பேரி காசி விஸ்வநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் கடந்த 1ம் தேதி காலை கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து அன்றைய தினமே காலை 10 மணிக்கு மேல் புதிய தேருக்கான வெள்ளோட்டமும் நடந்தது. தேர் முன்பு போல ரதவீதிகளில் பயணித்து நிலையம் வந்து சேர்ந்தது.
இதையடுத்து திருவிழா நாட்களில் 10 தினங்களும் வேத பாராயணம், திருமுறை பாராயணம் நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் காலையில் யாகசாலை பூஜைகள், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகளும் நடந்தன. மாலையில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் தினமும் நடந்தது. இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று 10ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று மகிழ்ச்சி பொங்க தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.விழாவில் நாளை 11ம் தேதி (வெள்ளி) காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடக்கிறது.
The post விழாக்கோலம் பூண்டது சீவலப்பேரி காசிவிஸ்வநாதர் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.