சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5 கோடியே 70 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம், ரூ.4 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள
முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கம் இரண்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திறந்து வைக்கிறார் . இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டிற்காகவும். தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களைப் போற்றி அவர்களுடைய சிலைகளையும் மணிமண்டபங்களையும், அரங்கங்களையும் அமைத்து வருங்கால இளைஞர்கள் அறிந்து உணர்ந்து பின்பற்றும் வண்ணம் 10க்கும் மேற்பட்ட நினைவரங்கங்களையும் 37 திருவுருவச் சிலைகளையும் திறந்து வைத்துள்ளார்கள்.
மேலும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்குமான நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்கள். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 28.1.2025 செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வழுதரெட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் இரண்டையும் திறந்துவைக்கிறார்கள்.
21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம்
வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீட்டு முறை நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால், அதுவரை ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் முடக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, முதலிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஒதுக்கீட்டு முறைக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புகள் வழங்கின. அதன் காரணமாக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தியத் துணைக் கண்டத்தையே கவனிக்க வைத்த இந்த பெரும் போரட்டம் காரணமாக பெருந்தலைவர் காமராஜர் அதனை அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களிடத்திலே எடுத்து வலியுறுத்தியதன் பயனாக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இடஒதுக்கீட்டு முறை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இத்தகைய சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1987ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் உயிர்த் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989ஆம் ஆண்டு அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து. அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அது மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்வந்தவர்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 2.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண். 110 இன் கீழ் அறிவித்தவாறு விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் ரூபாய், 5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம்
முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி 1918-ஆம் ஆண்டு ஜுன் 15 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தேங்காய்திட்டு கிராமத்தில் ஆனையப்பர், மீனாட்சி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பேரறிஞர் அண்ணா ஆதரவோடு 1952-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமி , “குலக் கல்வித் திட்டம் எதிர்ப்பு”. “தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்கு ஆதரவு”. “திராவிட நாடு திராவிடருக்கே” போன்ற முழக்கங்களைச் சட்டமன்றத்தில் எழுப்பியவர். பின்னர், 1957-ஆம் ஆண்டிலும், 1967-ஆம் ஆண்டிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அமைச்சரவையிலும் 1969-ஆம் ஆண்டு கலைஞர் அமைச்சரவையிலும் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். ஏ.கோவிந்தசாமி அமைச்சராகத் திகழ்ந்தபோது, “நந்தன் கால்வாய்த் திட்டம்”, “மீன்பிடி துறைமுகம்”. “பால் பவுடர் தொழிற்சாலை”, “கோழிப்பண்ணைத் திட்டம்”, எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். மேலும், முதியவர்களுக்கு நிதியுதவித் திட்டம் அமைத்தல், குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி, சிற்றூர்களில் மருத்துவமனை, உழவர்களுக்கு உதவி வழங்குதல், ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்குதல் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கினார். அவர்களைக், “கொள்கைக் குன்றம்” என்று போற்றியுள்ளார். ஏ.ஜியின் கல்விப் பங்களிப்பினைப் போற்றும் வகையில் திண்டிவனத்தில் தொடங்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிக்கு, “ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி” எனப் பெயர் சூட்டினார். ஆடம்பரத்தின் நிழல் சிறிதும் படராத எளிய குணத்தாலும், நிறைந்த புகழாலும், அனைவராலும் விரும்பப்பட்ட ஏ.கோவிந்தசாமி. 1969-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள் இயற்கை எய்தினார். சென்னை பெசன்ட்நகர் இடுகாட்டில் அரசு மரியாதையுடன் ஏ.ஜி உடல் அடக்கம் செய்யப்பட்டபோது தந்தை பெரியார் தம் உடல் நிலை சரியில்லாத போதும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் என்பது இவருடைய பெருமைக்கு மேலும் புகழ் சேர்ப்பதாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி பெருமையினை நினைவுகூரும் வகையில் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் நினைவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தையும். 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும் நாளை 28.1.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்குத் திறந்துவைத்துச் சிறப்பிக்கிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post விழுப்புரத்தில் ரூ.5 கோடி செலவில் சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.