*மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்று வரும் 5ம் நாள் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தகத் திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் கடந்த 2ம்தேதி தொடங்கி வரும்12ம்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது 5வது நாளாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புத்தகக் கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கிச் செல்வதை நேரில் பார்வையிட்டதுடன், மாணவ, மாணவிகளிடம் தாங்கள் பயிலும் பள்ளி, வகுப்பு மற்றும் பெயர் குறித்து கேட்டறிந்து, புத்தகத்திருவிழாவில் நீங்கள் வாங்கிய புத்தகங்கள் என்னவென்றும், இப்புத்தகம் வாங்குவதற்கான காரணம் மற்றும் அப்புத்தகத்தின் சிறப்புகள் மற்றும் பயன்கள் குறித்து மாணவ, மாணவியர்களிடம் கேட்டறியப்பட்டது.
அப்போது மாணவ, மாணவிகள் விருப்பத்திற்கேற்ப புத்தகத்தில் கையொப்பமிட்டு வழங்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகளிடம் நாள்தோறும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவார்ந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்திட வேண்டும். பொது அறிவு தொடர்பான புத்தகங்களையும் படித்து, நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என மாணவ, மாணவியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மஞ்சப்பை வழங்கி நெகிழிப் பை பயன்பாட்டினை தவிர்த்து சுற்றுப்புறத்தினை பாதுகாத்திட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், புத்தக திருவிழாவில், இணைய தளத்தில் நாட்டுமையாக்கப்பட்ட மின்னூல்கள் தரவிறக்கம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இணைய பக்கத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இப்பகுதிக்கு சென்று இலவசமாக புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அரசு போட்டித்தேர்விற்கு தயாராகுபவர்களுக்கும் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே, மாணவ, மாணவிகள் பெருமளவில் இணைய பக்கத்திற்கு சென்று புத்தகங்களை இலவசமாக தரவிறக்கும் செய்து பயன்பெற வேண்டும். தொடர்ந்து, புத்தகத் திருவிழா அரங்கில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post விழுப்புரத்தில் 5வது நாள் புத்தக கண்காட்சி பொது அறிவு புத்தகங்களை படித்து நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Dinakaran.