விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாணவர்கள் கள ஆய்வின்போது தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் உறைக்கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் சரவணன், ராகுல், பவாதாரணி, சத்யா, சோபியா ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது பூமியின் மேற்பரப்பில் சங்ககால சுடுமண் உறைகிணறு 2 இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் கூறியதாவது: தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேலுடன் நாங்கள் மேற்புற கள ஆய்வு மேற்கொண்ட போது பூமியின் மேற்பரப்பில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், உறைகிணறுகள் ஆகியவற்றை கண்டறிந்தோம். தமிழகத்தில் கிணறுகள் தோண்டப்பட்டதையும், அவற்றிலிருந்து நீர் எடுத்தலை பற்றியும் சங்க இலக்கியங்களான அகநானூறும், பெரும்பாணாற்றுப்படையும் கூறுகின்றன.
இவற்றில் ஒருவகை `உறை கிணறு’ என்பதாகும். சுடுமண்ணாலான வளையங்களை கொண்டு அமைக்கப்பட்ட கிணறு ‘உறைகிணறு’ எனப்படும். பொதுவாக கடற்கரை அருகிலும், மணற்பாங்கான இடத்தின் பக்கங்களிலிருந்தும் மண் சரிந்து விடாமல் இருப்பதற்காக உறை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. கடற்கரை அருகில் உறை கிணறுகள் இருந்ததாக பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. ‘உறை கிணற்றுப் புறச்சேரி’ என்ற ஒரு பகுதி அழைக்கப்படுகிறது. நல்ல தண்ணீருள்ள கிணறு பற்றியும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. 2 வகையான உறை கிணறுகள் உள்ளன. ஒரே உயரம் அளவு உடையதாக வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வளையங்களுக்கு இடையில் களிமண் பூச்சு இருக்கும். சில இடங்களில் வளையத்தின் நடுவே சிறு துவாரம் இருக்கும்.
இதன் வழியே பக்கவாட்டு நிலத்தில் உள்ள நீர் கிணற்றுக்கு சென்றுவிடும். இது அடுக்கு வகை உறை கிணறு. மற்றொரு வகையில் உறை கிணற்றின் மேற்பகுதியின் விட்ட அளவு, கீழ்பகுதியை விட குறைவாக இருக்கும். அதனால், ஒரு வளையத்தின் மேல் இன்னொரு வளையம் வைக்கும்போது மேலே வைக்கப்படும் வளையத்தின் கீழ்ப்புற விட்ட அளவு அதிகமாக இருப்பதால் அது கீழே உள்ள வளையத்தில் நன்றாக சொருகிக் கொள்ளும். இது சொருகு வகை உறை கிணறு. குடிநீர் தேவைக்காகவும் வீட்டின் பயன்பாட்டுக்காகவும் உறை கிணறு தோண்டும் முறை சங்க கால முதல் அண்மைக்காலம் வரை இருந்து வருகின்றன. தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் கண்டறிந்த உறை கிணறுகள் அடுக்கு வகையை சார்ந்தது. அதுமட்டும் அல்லாமல் தென்பெண்ணையாற்றில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் ஆய்வாளர்களால் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.