*ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் உத்தரவு
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டபணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளநீர் வெளியேற்றும் மையம், பாண்டியன் நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பகுதிகள், அறிவுசார்மையம் மற்றும் நகராட்சிஅலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் ஆய்வுமேற்கொண்டார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:
விழுப்புரம் நகராட்சிக்குஉட்பட்ட புதிய பேருந்துநிலையத்தில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் மூலம் வெள்ளநீர் வெளியேற்றும் திட்டத்தின்கீழ் மழைநீர் வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீர் 100 ஹெச்பி மின்மோட்டார் மூலம் மழைநீர் பம்பிங் செய்யப்பட்டு பாண்டியன் நகரிலுள்ள மழைநீர் வாய்க்காலுக்கு கொண்டுசெல்லும் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
இதனைதொடர்ந்து பாண்டியன் நகரில் விழுப்புரம் புதிய பேருந்துநிலையத்திலிருந்து வரப்பெறும் மழைநீர்பாண்டியன் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் பகுதிக்கு வரப்பெறுவது குறித்து நேரில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
மேலும் இப்பகுதிக்கு வரப்பெறும் மழைநீர் சாலாமேடு ஏரிக்கு செல்லும் வழித்தட வாய்க்கால் பகுதியும் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீர்வழித்தட வாய்க்கால் பகுதியினை முறையாக சீரமைத்து பராமரித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட விராட்டிக்குப்பம், சாலாமேடு, வழுதரெட்டி, கா.குப்பம், எருமனந்தாங்கல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டபணிகள் விவரம் குறித்து கேட்டறியப்பட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கீழ்பெரும்பாக்கத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுமேற்கொளள்ப்பட்டது.
ஆய்வின்போது நாள்தோறும் வரப்பெறும் மாணவர்களின் விவரம், அறிவுசார் மையத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பெறும் தகவல்தொடர்பான சேவை விவரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் அரசு போட்டிதேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து போட்டிதேர்வுக்கான புத்தகங்களும் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் குடிநீர், தொழில், தொழிற்நிறுவனங்கள், சொத்துவரி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் கூறினார். அப்போது நகராட்சி ஆணையர் வசந்தி உடனிருந்தார்.
அரசு போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்களை வாங்க உத்தரவு
இதனிடையே விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2.5 கோடியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான், அரசு போட்டி தேர்வுக்காக அங்கு படித்துவரும் நபர்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, இப்பூங்கா படிப்பதற்கேற்ற நல்ல சூழ்நிலையில் உள்ளதாகவும், சுகாதாரமான குடிநீர், கூடுதல் கழிப்பறை வசதி வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து துறைசார்ந்த அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாவட்ட மையநூலகத்தில் ஆய்வுசெய்தபோது, அரசு போட்டி தேர்விற்காக பயிற்சி பெற்றுவரும் நபர்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, நூலகத்தில் அரசு போட்டி தேர்விற்கான அனைத்து புத்தகங்களையும் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
The post விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 ஊராட்சிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.