தவெக தலைவர் நடிகர் விஜய்யும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யூடியூப் சேனல் ஒன்று மார்ஃபிங் செய்து அண்மையில் வெளியிட்டது. அதில், ரங்கசாமியின் படத்துக்குப் பதிலாக பாஜக தலைவர் அண்ணாமலையின் படத்தை வைத்து மார்ஃபிங் செய்திருந்தார்கள். இந்த வீடியோ வெளியானதை அடுத்து, பாஜக-வுக்கு ஆதரவாகவே விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டன.
இதையடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான காந்திமதிநாதன் என்பவர் போலீஸில் புகாரளித்தார். போலீஸ் கண்டுகொள்ளாததால் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இது தொடர்பாக காந்திமதிநாதன் ஜனவரி 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அதன்மீது போலீஸார் விசாரணை நடத்தி 2 மாதத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.