எட்டு மணிக்குக் கதவை மூடு… மீண்டும் அசோக் கெலாட்!
ராஜஸ்தானில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். அப்படித் திறந்து வைத்திருந்தால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும், உரிமம் ரத்துசெய்யப்படும், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார். 2008-ல் அசோக் கெலாட் முதல்வராகப் பதவியேற்றபோது இதே உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதற்கு மக்களிடம் ஆதரவு கிடைத்தது. அதனால்தான் அந்த உத்தரவை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தார் கருணாநிதி. ஜெயலலிதா காலை 10 மணிக்குப் பதிலாக 12 மணிக்குக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மதியம் 2 மணிக்குத் திறக்கலாமே என்று யோசனை தெரிவித்திருக்கிறது உயர் நீதிமன்றம். மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது ஒருபுறம் இருக்கட்டும்… முதற்கட்டமாகத் திறந்திருக்கும் நேரத்தையாவது குறைப்பது நல்ல யோசனை.
விவசாயிகளை வெறுப்பேற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டம்
உத்தர பிரதேசத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. வயதான மாடுகளை வீடுகளில் வைத்துப் பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை வீதிகளில் விட்டுவிடுகின்றனர்.
மாடுகளை இறைச்சிக் கூடங்களுக்கு ஓட்டிச்செல்ல முடியாத கோபத்தில் இருக்கும் விவசாயிகள், வாய்ப்பு கிடைக்கும்போது வன்செயல்களில் இறங்கித் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில், ஆரையா மாவட்டம் தக்ளிபூர் கிராம விவசாயிகள், தெருவில் சுற்றித்திரிந்த மாடுகளை அரசு பள்ளிக்கூட வளாகத்துக்குள் விரட்டிவிட்டனர்.
அப்போது பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. மாடுகள் உள்ளே வருவதைத் தடுத்த பள்ளி முதல்வரையும் ஆசிரியரையும் தாக்கியிருக்கிறார்கள். அவர்கள் காவல் துறைக்குத் தகவல் தருவதைப் பார்த்ததும் மேலும் கோபப்பட்டு பள்ளியில் இருந்த சில ஆவணங்களை எடுத்துக் கிழித்து எறிந்திருக்கிறார்கள். 9 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து தேடிவருகிறது காவல் துறை. மாடுகள் வழக்கம்போலத் தெருவில் வலம்வந்துகொண்டிருக்கின்றன