புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, விவசாயிகள் எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் (70), கன்னவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கினார். ஒரு மாதத்தைக் கடந்த இந்தப் போராட்டம் தொடர்கிறது. அவருடைய உடல்நிலை மோசமாகி வருகிறது.