புதுடெல்லி: சிசிடிவி காட்சி மற்றும் வேட்பாளர்களின் வீடியோ கட்சிகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு என்பது தங்களின் கூற்றுக்கான நிரூபணம் என்றும், இது தேர்தல் நடைமுறைகளின் ஒருமைப்பாட்டை படிபடியாக அழித்துவிடும் என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை, பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 93-ல் சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ)-வில், ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு அந்த விதியில், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என மாற்றப்பட்டுள்ளது.