லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது தனது புத்தகத்தை பத்திரப்படுத்திக் கொண்டு ஓடியச் சிறுமியின் கல்விக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குபவர்கள் உண்மையில் வீடற்றவர்களே! தனது புத்தகத்தை காப்பாற்றி ஓடிய அந்தச் சிறுமியின் கல்விக்கு உதவுவோம் என நாங்கள் உறுதி எடுக்கிறோம். படிப்பவர்களால் மட்டுமே கல்வியின் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும். புல்டோசர் என்பது அழிவு சக்தியின் சின்னம்; அறிவு, புரிதல் மற்றும் ஞானத்தின் சின்னமில்லை. ஒரு புல்டோசர் ஆணவம் என்ற எரிபொருளால் இயக்கப்படுகிறது. பெருமையின் சக்கரங்கள் மீதேறி நகர்கிறது. அதில் நீதியின் கடிவாளம் இருப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.