திருவள்ளூர்: வாடகைக்கு குடியிருந்தபோது வீட்டின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு மகள்களுடன் தாய் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மாருதி தெருவை சேர்ந்தவர் முகமதுபாரிக். இவரது வீட்டில் வாடகைக்கு உமாமகேஸ்வரி (37) என்பவர் கணவர் சரவணன், 2 மகள்களுடன் கடந்த 10 மாதங்களாக வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு மாதந்தோறும் ரூ. 2ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்திவந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் வாடகை பணம் கேட்டபோது அவருக்கும் உமாமகேஸ்வரிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது உமா மகேஸ்வரி, ‘’ இன்னும் இரண்டு மாதத்தில் மொத்த வாடகை பணத்தையும் தந்துவிடுகிறேன்’ என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், வீட்டு வாடகை சம்பந்தமாக பேசவேண்டும் என்று உமாமகேஸ்வரியை தனது வீட்டுக்கு அழைத்து முகமது பாரிக் திடீரென அவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். இதனிடையே உமா மகேஸ்வரி வசித்துவந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, பித்தளை, வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமா மகேஸ்வரி, வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குபதிவு செய்துவிட்டு விசாரிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து உமாமகேஸ்வரி தனது இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் வீட்டு உரிமையாளர் முகமதுபாரிக் மற்றும் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எழுதிவைத்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பிரதாப்பிபிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், ‘8மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
The post வீட்டின் உரிமையாளர் பாலியல் தொல்லை; திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இரு மகள்களுடன் தாய் போராட்டம்: உறவினர்களும் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.