*கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
சேலம் : சேலம் அருகே வீட்டை காலி செய்ய மிரட்டல் விடுப்பதாக கூறி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டி கோல்காரனூரை சேர்ந்த தொழிலாளி சுரேஷ் (32) என்பவர், தனது மனைவி மல்லிகா மற்றும் குழந்தைகள் ஹேமஸ்ரீ, ஸ்ரீமாருதி, கபின் ஆகியோருடன் வந்தார். நுழைவுவாயில் அருகே வந்தபோது, திடீரென சுரேஷ் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, தனது உடலில் ஊற்றியதோடு மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். தொடர்ந்து அவர்களை சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தினர். தீக்குளிக்க முயன்ற சுரேஷின் தந்தை பெயரில் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு, அரசு சார்பில் இலவச தொகுப்பு வீடு வழங்கப்பட்டு உள்ளது. அந்த வீட்டுக்கான பட்டா தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதேபகுதியில் உள்ள உறவினர்கள் சிலர் சேர்ந்துகொண்டு, சுரேஷை வீட்டை காலி செய்து செல்லுமாறு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, ஓமலூர் போலீசாரிடம் புகார் அளிக்க, அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post வீட்டை காலி செய்ய மிரட்டல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.