கடலூர்: வீராணம் ஏரி தண்ணீரில் நுரை பொங்குவதால், ஏதேனும் ரசாயனம் கலந்துள்ளதா? என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. சேத்தியாத்தோப்பு பூதங்குடியில் துவங்கும் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ நீளம், 5 கி.மி அகலம் கொண்டது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 44 அடி உள்ளது. இந்த ஏரியின் மூலம் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் செல்கிறது. கோடை காலம் தற்போது வாட்டி வதைத்து வந்தாலும், வீராணம் ஏரியில் நீர் நிறைந்து இருப்பது அப்பகுதி கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
இருப்பினும் தற்போது ஏரியின் கரையோரங்களில் தண்ணீரில் நுரை பொங்கி காணப்படுகிறது. அவை பல இடங்களிலும் பரவி இருக்கிறது. ஏரி நீரில் ஏதேனும் ரசாயனம், அல்லது கழிவுகள் கலந்திருக்கலாம் என இப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஏரியில் உள்ள தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். கடந்த ஆண்டு வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வழியான வடவாறு வாய்க்காலில் வந்த நீர் பச்சை நிறமாக மாறியபோது சென்னை மாசுகட்டுப்பாடு துறை அதிகாரிகள் ஏரியில் தன்ணீரை எடுத்து ஆய்வு செய்தனர். அதேபோல் இப்போதும் ஆய்வு செய்ய ேவண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post வீராணம் ஏரியில் கரையோரங்களில் பொங்கும் நுரையால் அதிர்ச்சி: நீரின் தரத்தை ஆய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.