நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவருக்குப் பின் கமல்ஹாசன் என்கிற வரிசையில் நடிப்புக்காகப் பேசப்படும் தற்கால நடிகர்கள் பலருண்டு. அவர்களில் சியான் விக்ரமுக்கு தனித்துவம் மிக்கவர். அந்தத் தனித்துவம் வேறொன்றும் அல்ல; கொடுக்கும் கதாபாத்திரமாக மாறிக்காட்டும் அதிசயத்தை நிகழ்த்திவிடும் அவருடைய நடிப்பாற்றல்தான். கடைசியாக ‘தங்கலான்’ படத்தில் அவர் காட்டியிருந்த உழைப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது.
ஆனால், வணிக ரீதியாக அப்படம் வெற்றிபெறவில்லை. என்னதான் திறமையான கலைஞன் என்றாலும் வசூல் வெற்றிதான் எந்தவொரு ஹீரோவையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அப்படியொரு வெற்றிக்காக சியான் விக்ரம் கடந்த பல வருடங்களாகக் காத்திருந்தார். அவரின் காத்திருப்பை ‘வீர தீர சூரன்’ படம் நிறைவேற்றும் என்று கூறி வருகிறார்கள் விக்ரமின் வெறித்தனமான ரசிகர்கள். அப்படி அந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்பதை, நேற்று நடந்த அப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விக்ரம் உள்ளிட்ட கலைஞர்கள் உடைத்துப் பேசினார்கள். அதைத் தெரிந்துகொள்ளும் படக்குழு குறித்த விவரங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.