விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ‘வீர தீர சூரன்: பார்ட் 2'. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். வரும் 27-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் விக்ரம் பேசும்போது, “அருண்குமார் இயக்கிய ‘சித்தா’ படம் என்னைப் பாதித்தது. அது சிறந்த படம். அதைப் பார்த்த பிறகு அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான், ‘வீர தீர சூரன்’. என்னுடைய ரசிகர்கள் வேறு மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நானும் காத்திருந்தேன். இயக்குநர் சொன்ன இந்தக் கதையின் கரு எனக்கு பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். ரசிகர்களுக்காக ரகளையான, ஆனால் ஒரு எமோஷனலான படமாக இது இருக்கும். எஸ்.ஜே. சூர்யா, ஓய்வே இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.