சென்னை: சென்னை பல்லாவரத்தில் திமுக சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில்; “தமிழை ‘தமிழ்’ எனச் சொல்லி அழைப்பதை விட வேறு எதுவும் இன்பமாக இருக்க முடியாது.வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய அரசு முயற்சி செய்தி கொண்டிருக்கிறது. அன்னைத் தமிழை அழிக்க அந்நிய இந்தி திணிக்கப்படுகிறது. 1967-ல் திமுக ஆட்சி அமைந்த பின்னர்தான் தமிழ்நாட்டை இருமொழி கொள்கை கொண்ட மாநிலமாக பாதுகாத்தோம்.அதற்கு சிக்கலை உருவாக்கத்தான் மும்மொழி கொள்கையை கொண்டு வர பார்க்கிறார்கள். தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் அடிப்படையில்தான். பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலமாக திணிக்க நினைக்கிறார்கள்.
மாநில அரசு நிதியால், தமிழக மக்கள் உழைப்பால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை மட்டும் ஆளுநர் நியமிப்பாரா?. பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க தெரியாதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஏன் வேந்தராக இருக்கக் கூடாது?.
தற்போது யுஜிசி வரைவு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். அதை திரும்பப்பெற வேண்டும் என நாட்டிலேயே முதல்முறையாக நாம்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியா கூட்டணியில் உள்ள ஆளும் கட்சி முதல்வர்களுக்கு கடிதம் எழுதினேன். தற்போது கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை உருவாக்கிவது மாநிலங்கள். அதை நிர்வகிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டாமா? எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்யலாமல், எதை செய்யக் கூடாதோ அதை ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கு தர வேண்டிய பேரிடர் நிவாரண நிதியை தர மறுக்கிறார்கள். பள்ளி கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். புதிய சிறப்பு திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரே இல்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் செய்திருக்கனும். செய்யவில்லை.
ஆனால் இந்தியை திணிப்பாங்க. சமஸ்கிருத பெயரை புகுத்துவார்கள். மாநில உரிமைகளில் தலையிடுவார்கள். குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவார்கள். நம் குழந்தைகளை பழி வாங்குவார்கள். அதற்காக நீட் நடத்துவாங்க. புதிய கல்விக்கொள்கையை புகுத்துவாங்க. இதுதான் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம்.
ஒற்றை மதம்தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒற்றை மொழிதான் இருக்க வேண்டும் என நினைக்கிறது. சமஸ்கிருதத்தை நேரடியாக கொண்டு வந்தால் கடுமையான எதிர்ப்பு வரும் என்பதால், இந்தியை முதலில் கையில் எடுப்பார்கள். அதை அரியணையில் அமர்த்திவிட்டு, சமஸ்கிருதத்தை கையில் எடுப்பார்கள். முதலில் இந்தி, அதன்பின் சமஸ்கிருதம். இதுதான் பாஜகவின் கொள்கை.
அன்று மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து தமிழை காத்தார்கள். பல்கலைக்கழகங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் ஆபத்தை முறியடிக்க மாணவர் அணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறும். அன்று மொழிப்போரில் ஈடுபட்டு இந்தி பேசாத மாநில மொழிகளை காப்பாற்றினோம். இன்று கல்வி உரிமை போரில் ஈடுபட்டு எல்லா மாநில கல்வி உரிமைகளையும் காக்க திமுக மாணவரணியினர் முன்கள வீரர்களாக டெல்லியில் திகழ்வார்கள்” என முதல்வர் உரையாற்றினார்.
The post வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரை appeared first on Dinakaran.