சின்னசேலம்: சின்னசேலம் அருகே பழைய வெடிமருந்து குடோனில் இருந்த வெடிமருந்துகள் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வாணகொட்டாய் என்ற இடம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு கிணறு தோண்ட பயன்படுத்தும் வெடிகள் மற்றும் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் வாணவெடிகள் போன்றவை தயாரித்து வந்தனர். இதனால் இப்பகுதிக்கு வாணகொட்டாய் என்ற பெயர் வந்தது. இங்கு பூமாலை (72) என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள சிறிய கட்டிடத்தில் கடந்த 1974 முதல் 1984 வரை 10 ஆண்டுகள் வெடிபொருள் வைத்திருக்கும் அறையாக முத்துசாமி என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்டிடம் காலியாக இருந்து வந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த இடத்தில் கிணறு வெட்டி வந்தனர். அதனால் அந்த குடோனில் கிணறு வெட்ட பயன்படும் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிமருந்துகளை வைத்திருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பூமாலையின் மகன் உடல்நிலைக்குறைவால் இறந்து விட்டதால் அங்கு யாரும் செல்லவில்லையாம். அங்கு காவலுக்கும் யாரும் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. சிறிதுநேரத்தில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதாலும், காவலுக்கு யாரும் இல்லை என்பதாலும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்து தரைமட்டமான வெடிமருந்து குடோனை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குடோனுக்கு லைசன்ஸ் முடிந்த பின்னரும் அதனை புதுப்பிக்காமல் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக குடோனின் உரிமையாளர் பூமாலையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வெடிமருந்துகள் வெடித்து குடோன் தரைமட்டம்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.