லண்டன் : வெப்ப அலை தாக்கத்தால் கோடையின் தொடக்கத்திலேயே தெற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்பத்தில் தவிக்கின்றன. குளிர் பகுதிகளில் இருக்கும் ஐரோப்பிய நாடுகள், காலநிலை மாற்றம் மத்திய தரைக்கடல் வெப்பமாதல் உள்ளிட்ட காரணங்களால் கோடையில் கடும் வெயிலை எதிர்கொண்டு வருகின்றன. கோடையின் தொடக்கமான ஜூன் மாதத்திலேயே அங்கு வெப்ப அலை தாக்க தொடங்கிவிட்டது. சராசரியாக ஐரோப்பிய நாடுகளில் கோடை வெப்பம் அதிகபட்சமே 36 டிகிரி செல்சியஸ் தான். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.
ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . ஜூன் மாதத்தின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக ஞாயிற்றுகிழமை எல் கிரானடோ நகரில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. போர்ச்சுக்கள் நாட்டிலும் வழக்கத்தை விட ஜூன் மாதம் அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. மோராநகரில் 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியது. வரலாற்றிலேயே ஜூன் மாதம் பதிவான மிக அதிக வெப்பம் இதுவாகும். இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ரோம் நகரில் வெயில் தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் கைகளில் இ – விசிறி வைத்துகொண்டு வலம் வருகின்றனர்.
அலங்கார நீரூற்றுகளில் பெருக்கெடுக்கும் நீரை தெளித்து பலரும் வெப்பத்தை தனித்துக் கொள்கின்றனர். உலகில் மிக பழமையான டென்னிஸ் போட்டி தொடரான விம்பிள்டன், வெப்ப அலை தாக்கத்துடன் போட்டியை தொடங்கி இருக்கிறது. போட்டி நடக்கும் போது, லண்டனில் சராசரியாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 28 டிகிரி செல்சியஸ் வெயில் தாக்கியது. விம்பிள்டன் வரலாற்றிலேயே போட்டியின் முதல்நாளில் பதிவான மிக அதிக வெப்பம் இதுதான். வெப்ப அலை தாக்கத்தை சமாளிக்க பிரான்சில் உள்ள முதியோர் இல்லங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டனர். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உள் அறையிலேயே கேளிக்கை விளையாட்டுகளை நடத்த தொடங்கிவிட்டனர்.
The post வெப்ப அலை தாக்கத்தால் கோடையின் தொடக்கத்திலேயே தெற்கு ஐரோப்பிய நாடுகள் தவிப்பு!! appeared first on Dinakaran.