விருதுநகர்: மே மாதத்தில் 3-ம் கட்ட பணிகள் முடிக்கப்பட உள்ளதால், வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளை தெடார்ந்து நடந்து வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கீழடி, சிவகலை, மயிலாடும்பாறை, கங்ககொண்டசோழபுரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி துலுக்கர்பட்டி, தருமபுரி பெரும்பால என மொத்தம் 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க விருதுநகர் மாவட்டத்தில் பண்டைய நாகரிகத்தின் எச்சங்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வெம்பக்கோட்டையிலும் ஏராளமான பண்டைகால வரலாற்று எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு அதிக அளவிலான நுண்கற்கருவிகள், சங்ககால மட்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.