திருப்புவனம்: வெயில் தொடங்கியும் வியாபாரிகள் எட்டிப் பார்க்காததால், திருப்புவனம் பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செலவு செய்த பணத்தை எடுக்க முடியுமா என விவசாயிகள் தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கிளாதரி, ம.லட்சுமிபுரம், அரசனூர், இலுப்பைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600 ஏக்கரில் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை கால விற்பனையை கணக்கில் கொண்டு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டுள்ளனர். கிளாதரி, லட்சுமிபுரம் பகுதிகள் செம்மண் பூமியாக இருப்பதால், தர்பூசணி பழத்தின் ருசி அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மதுரையில் விதை வாங்கும்போதே, கேரள வியாபாரிகள் தங்களுக்கு பழத்தை விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அட்வான்ஸ் கொடுப்பர்.
கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடக்க காலங்களில் 50 ஏக்கர் பயிரிடப்பட்ட தர்பூசணி, தற்போது 600 ஏக்கர் வரை பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கிளாதரி பகுதியில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த 60 நாட்களில் அறுவடைக்கு வரும். இப்பகுதியில் விளைச்சலும் அதிகமாக இருக்கும். ஏக்கருக்கு 20 டன் வரை தர்பூசணி பழங்கள் கிடைக்கும். சுழற்சி முறையில் அறுவடை நடைபெறும். இந்நிலையில், இந்தாண்டு தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயன மருந்து செலுத்துவதாக செய்தி பரவியதால், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் காலம் தொடங்கியவுடன் கிளாதரி, லட்சுமிபுரம் பகுதிக்கு வரும் கேரள வியாபாரிகள் லாரி, லாரியாக பழங்களை ஏற்றிச் செல்வர். கேரள சுற்றுலாத் தளங்களில் தமிழக தர்ப்பூசணி பழங்கள்தான் அதிகளவில் விற்பனையாகும்.
ஆனால், இந்தாண்டு எதிர்பார்த்த அளவில் கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால், விளைச்சல் இருந்தும் அறுவடை செய்ய மனமில்லாமல், விவசாயிகள் நிலத்திலேயே விட்டுள்ளனர். செடியிலே பழங்கள் அழுகி வருகின்றன.
இது குறித்து விவசாயி முத்துச்சாமி கூறுகையில், ‘தர்பூசணி பழங்கள் விளைந்து வரும்போது சிறிய அளவில் கல் அல்லது முள் குத்தினாலே, அந்த துளையில் இருந்து நீர்வந்து பழம் கெட்டுவிடும். இவ்வாறு இருக்கையில், ஊசி மூலம் எவ்வாறு ரசாயனத்தை செலுத்த முடியும். ஊசி போட்டால் பழம் அழுகி வீணாகி விடும். சாகுபடிக்காக நிலத்தை சுத்தம் செய்யும்போதே, பழங்களில் கல், முள் குத்தக்கூடாது என்பதற்காக முதலில் அவைகளை கவனமாக அப்புறப்படுத்துவோம். யாரோ சிலர் செய்த செயலால் ஒட்டு மொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். சீசன் சமயத்தில் வெளியிட்ட வீடியோவால் வியாபாரிகளே வரவில்லை.
குறிப்பாக கேரள வியாபாரிகள் எட்டிப் பார்க்கவில்லை’ என்றார். விவசாயி கார்த்திக் கூறுகையில், ‘கிலோ 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை சீசன் சமயங்களில் தர்ப்பூசணி விற்பனையாகும். ஆனால், தற்போது 5 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். உள்ளூர் வியாபாரிகள் மட்டும் சிலர் வந்து வாங்கிச் செல்கின்றனர். இரண்டு மாதங்கள் பாடுபட்டு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கூட கிடைக்கவில்லை’ என்றார்.
The post வெயில் தொடங்கியும் வியாபாரிகள் எட்டிப் பார்க்கவில்லை; திருப்புவனத்தில் தர்பூசணி விற்பனை கடும் பாதிப்பு: விவசாயிகள் தவிப்போ… தவிப்பு… appeared first on Dinakaran.