பள்ளிபாளையம் : காவிரி ஆற்றில் மேய்ச்சலுக்கு விட்ட 10 ஆடுகள் வெறிநாய்கள் கடித்து பலியானது. 3 ஆடுகள் மாயமான நிலையில், 6ஆடுகள் காயமடைந்துள்ளது. பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், தங்களின் ஆடுகளை காவிரி ஆற்றங்கரையில் தினசரி மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.
நேற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பினர். ஆற்றில் நீர்வரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், குறைவான அளவே தண்ணீர் உள்ளது.
இதனால் கரையோரத்தில் விடப்பட்ட ஆடுகள் நடு ஆற்றிலிருந்த மேடான பகுதியில் மேய்ந்தன. மாலையானதும் ஆடுகள் தானாகவே வீடுகளுக்கு திரும்புவது பழக்கமாகி போனதால், விவசாயிகள் முன்னதாக வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.
ஆனால் மாலையில் பல ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஆற்றங்கரைக்கு சென்று தேடினர்.அப்போது ஆற்றின் நடுவில் இருந்த மேடான பகுதியில், 10ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறபட்ட நிலையில் இறந்து கிடந்தது.
மேலும் 3ஆடுகளை காணவில்லை. வீடு திரும்பிய 6ஆடுகள் மீது ஆழமான காயம் காணப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜனிடம் கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் சுசிலா, ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்தார். வெறிநாய்கள் சில ஒன்றாக சேர்ந்து, ஆடுகளை கடித்து கொன்று இருக்கலாம் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
The post வெறிநாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலி appeared first on Dinakaran.