பிஜீங்: வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் 76வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பீஜிங்கில் இந்திய தூதரக வளாகத்தில் நடந்த விழாவில் சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் ராவத் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இதில் பாரம்பரிய உடை அணிந்து வந்த இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த குடியரசு தினவிழாவில் இலங்கை கடற்படை இசைக்குழுவினர் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தேசபக்தி பாடல்களை இசைத்தனர். இலங்கைக்கான இந்திய தூதர்(பொறுப்பு) சத்யாஞ்சல் பாண்டே தேசிய கொடியை ஏற்றினார். இலங்கையின் ஒற்றுமைக்கும் அமைதிக்காகவும் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில்,இந்திய அமைதி படை நினைவிடத்தில் சத்யாஞ்சல் பாண்டே அஞ்சலி செலுத்தினார்.
சிங்கப்பூரில் இந்திய தூதர் ஷில்பக் அம்புலே தலைமையில் குடியரசு தின விழா நடந்தது. பிலிப்பைன்சில் நடந்த விழாவில் தூதர் ஹர்ஷ் ஜெயின் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார். ஜகார்த்தாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் பிஜாய் செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
The post வெளிநாடுகளில் குடியரசு தின விழா கோலாகலம் appeared first on Dinakaran.