சென்னை: வெளிநாட்டு கைதிகள் நலன் தொடர்பாக விதிகள் வகுப்பது குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்திய கைதிகளை போல வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடர்பாக எந்த விதிகளும் இல்லாததால், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக விதிகளை அரசு வகுக்க வேண்டும். இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை இணைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. மற்ற மாநிலச் சிறைகளில் வெளிநாட்டு கைதிகளுக்கான விதிமுறைகள் எதாவது வகுக்கப்பட்டிருந்தால் அதனை அடுத்த விசாரணையின்போது ஒன்றிய உள்துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், வீடியோ கால் உள்ளிட்டவை தொடர்பாக உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதிகள்; வெளிநாட்டு கைதிகள் நலன் தொடர்பாக விதிகள் வகுப்பது குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும். வெளிநாட்டு கைதிகளை எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே அந்த நாட்டில் நமது நாடு குறித்து மதிப்பீடு இருக்கும் என கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
The post வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.