ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் செல்லாத்தூர் ஏரி உள்ளது. கடந்த வாரம் பெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையில், இங்குள்ள செல்லாத்தூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியிலிருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறியதில், அங்குள்ள தரைப்பாலம் வெள்ளப் பெருக்கில் மூழ்கி பலத்த சேதமானது.
தற்போது அந்த தரைப்பாலத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் ஆர்.கே.பேட்டையில் இருந்து மடுகூர், அம்மனேரி, வெள்ளாத்தூர் இருளர் காலனி, கொண்டாபுரம், பரவத்தூர், வெங்குபட்டு, ஆதிபராகபுரம் சோளிங்கர் வரை சென்று வரும் பள்ளி மாணவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆர்.கே.பேட்டையில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு நீண்ட தூரம் மக்கள் சுற்றி வரவேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. இத்தகைய அவலநிலையை தடுக்க, செல்லாத்தூர் ஏரி வழியாக செல்லும் தரைப்பாலத்தை முற்றிலும் அகற்றிவிட்டு, அங்கு புதிதாக உயர்மட்ட மேம்பாலத்தை விரைவில் கட்டி தருவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் சேதம்: உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.