கீவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வுக்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பின் விருந்து நிகழ்வு ரத்து, வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் குழு வெளியேற்றம் என அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறின. அதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களும் ரியாக்‌ஷன்களுடன் கூடிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ‘உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப் பெரிய உதவியை வழங்கி வரும் நிலையில், அதற்காக நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ஜெலன்ஸ்கி ஒருமுறைகூட நன்றி தெரிவிக்கவில்லை’ என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தை கடினமாக இருந்த நிலையில், கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஜெலன்ஸ்கி வெளியேறினார். மேலும், அதிபர் ட்ரம்ப் அளிக்க இருந்த விருந்தும் ரத்து செய்யப்பட்டது.