பழநி: பழநி தைப்பூசத் தேரின், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டம் விடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலானது, தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது. இக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் விழாவிற்கு வள்ளி – தெய்வானை சமேததராக முத்துக்குமாரசுவாமி தேரில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் வைகாசி விசாகம் உள்ளிட்ட விழாக்களிலும் தேரோட்டம் நடைபெறும். இத்தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த தேர் பழுதடைந்ததை அடுத்து, கடந்த 2 வருடங்களாக புதிய தேர் தயார் செய்யும் பணி, 46 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வந்தது. இத்தேர் கடவுள் சிற்பங்கள், யாழி சிற்பங்கள் உட்பட பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் இலுப்ப மரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை உருவாக்கும் பணியில், சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த தேர் ஸ்தபதி பாலசுப்பிரமணி தலைமையிலான தேர் சிற்பிகள் ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சில நாட்களில் வெள்ளோட்டம் விடப்பட்டு, தைப்பூசத்தன்று புதியதாக தயார் செய்யப்பட்ட தேரில் சுவாமி உலா வரும் நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post வெள்ளோட்டத்துக்கு தைப்பூசத் தேர் தயார் appeared first on Dinakaran.