வேங்கைவயல் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகை அண்மையில் சிபிசிஐடியால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் நீடித்துவரும் நிலையில், இடைக்கால அறிக்கை சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சில குழந்தைகளுக்கு 2022 டிசம்பர் 24இல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் கூறியதன்பேரில், அப்பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்து பார்க்கப்பட்டபோது குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.