புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு இந்த வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.24ம் தேதி அசுத்தம் (மனிதகழிவு) கலந்த சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் ஜனவரி 20ம்தேதி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் அதே கிராமத்தில் வசிக்கும் போலீஸ்காரர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து இந்த வழக்கின் முதல் புகார்தாரரான கனகராஜ், ஜனவரி 27ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தி தீர்ப்பை 3ம்தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என வழக்கின் புகார்தாரரான கனகராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாரின் மனுவை ஏற்று, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்படுகிறது. இனி இந்த வழக்கு அந்த நீதிமன்றத்தில் தான் நடைபெறும் என நீதிபதி வசந்தி குறிப்பிட்டார். இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் குமார் கூறுகையில், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
The post வேங்கைவயல் விவகாரம் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை ஏற்பு வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்: புகார்தாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.