வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கில் காணும் பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வழக்கமாக பொங்கல் அன்று இளைஞர்கள், ஊர் மக்கள் ஒன்று கூடி விளையாட்டு விழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்தப் பகுதி இளைஞர்கள் வித்தியாசமாக சிந்தித்து இரண்டு தலைமுறைகள் பயன்படுத்திய 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தினர்.
குடில் அமைத்து அதில் முன்னோர்கள் பயன்படுத்திய ஏர் கலப்பை, மாட்டு வண்டி, நெல் சேமித்து வைக்கும் தொம்பை கூடு, சுரைக்காய் குடுவைகள், பாக்கு வெட்டி, சிறுவர்கள் பால் குடிக்கும் கெண்டி, சுளுக்கி, வீச்சரிவாள், பல்லாங்குழி, தாயக்கட்டை, எண்ணெய் சேமித்து வைக்கும் மண் குடுவைகள், அளவை பாத்திரங்கள், மரக்கால் முதல் படி வரை அந்த காலத்து நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த பொருள்களை ஆயிரக்கணக்கான பொது மக்கள் காலை முதல் இரவு வரை பார்த்து ரசித்தனர்.இதுவரை பார்க்காத பொருள்களை இங்கு பார்த்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர். இதையொட்டி 25க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, மரக்கன்று வழங்கப்பட்டது.
The post வேதாரண்யம் அருகே 500 வகை பழங்கால பொருட்களுடன் காணும் பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள் appeared first on Dinakaran.