*கோவையில் அதிகாரிகள் விசாரணை
வேலூர் : வேலூரில் தாய் வாங்கி வந்த குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டத்தில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் மனைவி 30 வயது இளம்பெண். இவருக்கு இரண்டரை வயதில் ஒரு மகன், ஒரு மகள் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோவைக்கு சென்ற இளம்பெண், அங்குள்ள ஒரு கடையில் இருந்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிரபல உணவு பொருள் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். அதில் இந்தாண்டு ஜூலை மாதம் 19ம் தேதி வரை காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நேற்று அந்த உணவு பாக்கெட்டினை பிரித்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
குழந்தைகள் இருவரும் அந்த தின்பண்டத்தை மிக ஆர்வமுடன் சாப்பிட தொடங்கினர். அப்போது அந்த தின்பண்டத்தில் புழு மிதந்ததை கண்டு அக்குழந்தைகளின் தாய் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த தின்பண்டத்தில் இருந்து ஸ்பூன் மூலம் வெளியே எடுக்கப்பட்ட புழு சாகாமல் நெளிந்துள்ளது. இதனை செல்போனில் படம் பிடித்த இளம்பெண் உணவு பாதுகாப்பு துறை மற்றும் நுகர்வோர் மன்றத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புழு இருந்ததாக புகார் வந்துள்ள குழந்தைகளுக்கான உணவு பொருள், கோவையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்டுள்ளது. ஆகையால் அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதன்படி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். உணவு பண்டத்தின் பேட்ச் அங்கு தான் இருக்கும். அங்கு தான் ஆய்வை செய்ய முடியும்’ என்றனர்.
The post வேலூரில் தாய் அதிர்ச்சி குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டத்தில் புழு appeared first on Dinakaran.