*2ம் நிலை பெண் காவலர்களுக்கு 3 நாள் கமாண்டோ பயிற்சி
வேலூர் : நக்சலைட், தீவிரவாதிகளை எதிர் கொள்வது எப்படி? என்று 2ம் நிலை பெண் காவலர்களுக்கு 3 நாள் கமாண்டோ பயிற்சி வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது.தமிழகத்தில் 2ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 8 காவலர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஓராண்டு பயிற்சி முடிவில் இவர்களுக்கான பணியிடம் ஒதுக்கப்படும். ஓராண்டு பயிற்சி காலத்தில் போலீசுக்கான அடிப்படை பயிற்சியுடன் கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடுதல், சட்டம், துப்பு துலக்குதல் உள்ள பல்வேறு நிலைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் இடையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை பயிற்சியும், கமாண்டோ பயிற்சியும் குறிப்பிட்ட சில நாட்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, வனப்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படை சார்பில் 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு நக்சலைட், தீவிரவாதிகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, கடத்தல் சம்பவங்களில் எப்படி செயல்படுவது, கடத்தப்பட்டவரை மீட்பது எப்படி?, விவிஐபி பாதுகாப்பின்போது செயல்படுவது எப்படி? என்பது போன்ற கமாண்டோ படையின் அடிப்படை பயிற்சி நேற்று காலை வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.
இப்பயிற்சி சென்னை மருதம் தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி மையம் ஐஜி தினகரன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜய சுரேஷ் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரால் வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.
The post வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நக்சலைட், தீவிரவாதிகளை எதிர் கொள்வது எப்படி? appeared first on Dinakaran.