நம் பாரத தேசம், 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடியிருக்கிறது. இந்த நன்னாளில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், 2047-ம் ஆண்டுக்குள் ‘விக் ஷித் பாரத்’ என்ற இலக்கை அடைய, இளைஞர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப புரட்சி, மற்றும் பொருளாதார தன்னிறைவு ஆகியவற்றை மையப்படுத்தி பேசினார். இந்தப் பின்னணியில், ‘வேலைவாய்ப்பு’ என்ற வெற்றுச் சொல்லை மீறி, ‘வேலை உத்தரவாதம்’ என்ற தொலைநோக்கு பார்வையை நாம் உருவாக்க வேண்டிய தருணம் இது!
தமிழ்நாடு, கல்வியில் முன்னோடியாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெறுகின்றனர். இதில், பொறியியல் துறையில் 2.5 லட்சம், மருத்துவத் துறையில் 20,000 – 25,000, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலா 1.15 – 1.7 லட்சம், மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) 40,000-க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகளாக வெளிவருகின்றனர். ஆனால், இவர்களில் 40% பேருக்கு மட்டுமே தற்போது வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மீதமுள்ள 60% இளைஞர்களுக்கு வேலை உத்தரவாதத்தை உருவாக்குவது அவசியமாகிறது.