புதுடெல்லி: நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில் தொழிலாளர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சியைவிட வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தெரிகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் தொழிலாளர் எண்ணிக்கை 34.7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சம்பள தரவுகளை ஆய்வு செய்தால், தொழிலாளர்களின் சம்பளம் கடந்த 7 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் பணவீக்கத்துக்கு ஏற்ப சம்பளம் உயரவில்லை. இதற்கு தொழிலாளர்களின் திறன் குறைவுதான் காரணம். பல நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்தால், இங்கு தொழிலாளர்களின் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறன் அதிகரிக்கும்போதுதான், உற்பத்தி அதிகரிக்கும், ஊதியமும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.