விழுப்புரம்: மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த வைகை விரைவு ரயிலின் கிச்சன் கேபினில் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் தீ எதுவும் பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டப் பிறகு, அங்கிருந்து புறப்பட்டு 46 நிமிடங்கள் தாமதாக தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தது.
மதுரையில் இருந்து தினமும் சென்னைக்கு காலை 6.45 மணிக்கு வைகை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல வெள்ளிக்கிழமை புறப்பட்ட ரயிலில் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த ரயில் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம் வழியாக உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது முற்பகல் 11:10 மணியளவில் கிச்சன் கேபினில் திடீர் புகை ஏற்பட்டது. உடனே விபத்து அபாய எச்சரிக்கை ஒலித்ததால், உடனடியாக ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.