ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது புதிய சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து அனைத்து ஊடகங்களும் செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை உடன்பாட்டுத் தொனியில் எச்சரிக்கும் விதமாக சில கருத்துகளைக் கூறியிருப்பது வைரலானது.
ஐபிஎல்-ன் இளம் வீரராக அடியெடுத்து வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி, அன்று தன் முதல் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே லக்னோவுக்கு எதிராக சிக்ஸருக்கு அனுப்பி அசத்தினார். அதுவும் அனுபவ பவுலர் ஷர்துல் தாக்கூரை அலட்சியமாக தூக்கி சிக்ஸருக்கு அனுப்புகிறார் என்றால் இவர் கையில் இன்னும் எத்தனை பவுலர்கள் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகின்றனரோ என்றே பேச்சாக இருந்து வருகிறது. இவரை மட்டுமல்ல ஷர்துலை விடவும் வேகமாக வீசும் ஆவேஷ் கான் பந்துக்கும் சிக்ஸர்தான் பதில்.