டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் டாக்டர். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசினா ஆட்சியில் ஏராளமானோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக தகவல் வௌியாகி உள்ளது. யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மைனுல் இஸ்லாம் சவுத்ரி தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. இதையடுத்து விசாரணைக்குழு நேற்று முன்தினம் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், “ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 1,676 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 758 புகார்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 200 பேர் அல்லது 27 சதவீதம் பேர் திரும்பி வரவில்லை. திரும்பி வந்தவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளனர். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களின் பின்னணியில் ஷேக் ஹசீனா உள்ளார். ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மேஜர் ஜெனரல் தாரிக் அகமது சித்திக், தேசிய தொலைத்தொடர்பு கண்காணிப்பு மைய முன்னாள் இயக்குநர் ஜியாவுல் அஹ்சனந்த் மற்றும் பிற காவல்துறை மூத்த அதிகாரிகள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில்வங்கதேசத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் மாயம்: விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.