ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராக பார்க்கப்பட்ட தமிழக காவல்துறை இன்று செயலிழந்து நிற்கிறது என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நேற்றையை தினம் நடைபெற்ற கொலை சம்பவங்கள் குறித்து எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவையில் அனுமதி கேட்டு பேச முற்பட்ட போது, ஏற்கனவே முன்அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே பேச வேண்டும் என சட்டப்பேரவை தலைவர் தெரிவித்தார். நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்சினையை எழுப்புவது எதிர்கட்சிகளின் கடமை. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, சட்டப்பேரவையில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல், நாட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக பேசியிருக்கிறது.