டெக்சாஸ்: 2025ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மீதான இரண்டாம் கட்ட சோதனை மீண்டும் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. விண்ணில் சீறி பாய்ந்த சில நிமிடங்களில் ராக்கெட் எண்ணற்ற துகள்களாக வெடித்து சிதறியது. அமெரிக்கா தொழில் அதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறக்க அதிநவீன ஸ்டார்ஷிப் ராக்கெட்டை வடிவமைத்து அதனை பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து வருகிறது. கடந்த ஜனவரி 17ம் தேதி ஸ்டார்ஷிப் ராக்கெட்டை 7வது முறையாக விண்ணில் செலுத்தி பரிசோதித்த போது அது நடுவானில் வெடித்து சிதறியது. இருப்பினும் ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தரையிறக்கினர்.
இந்நிலையில், அடுத்த கட்ட சோதனை முயற்சியாக 403 அடி நீள ஸ்டார்ஷிப் ராக்கெட் அமெரிக்காவின் டெக்ஸ் எக்ஸ் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மாதிரி செயற்கைக்கோளை சுமந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் ஸ்டார்ஷிப் ராக்கெட் நடுவானிலேயே சுக்குநூறாக வெடித்து சிதறியது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பாகங்கள் சிதறும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த முறையும் ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி வெற்றிகரமாக தரையிறங்கியது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்ததால் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
The post ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி: ஸ்டார்ஷிப் ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது! appeared first on Dinakaran.