திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயர் மற்றும் அவரது தந்தையின் பெயர் இந்தியில் அச்சிடப்பட்டு உள்ளதால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 6ம் தேதி வெளியிடப்பட்டு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பட்டியல் வழங்கப்பட்டது. மேலும், வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் மக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில், 1வது வார்டு 72வது பாகத்தில் 1,265-வது வரிசை எண்ணில் வாக்காளரின் தந்தை பெயர் மற்றும் 14வது பாகத்தில் 1,128-வது வரிசை எண்ணில் வாக்காளர் பெயர் மற்றும் அவரது தந்தையின் பெயர் இந்தியில் அச்சிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கவனத்துக்கு அரசியல் கட்சியினர் கொண்டு சென்றனர். தமிழகம் முழுவதும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள், பிரசாரம், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான விவாதங்கள் தீவிரமடைந்து உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சிலரது பெயர்கள் இந்தியில் அச்சிடப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்கள்: அரசியல் கட்சியினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.