*போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க காவல்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் நடைபெற்ற விபத்துகளில் 80 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். 260 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் இல்லாத வீடு இல்லை என்ற அளவிற்கு வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடிஏற்படுகிறது.
போக்குவரத்து விதிமீறல் அதிகம் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்க வேண்டும், உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் விபத்துக்கள் என்பது நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கைகளும் அதிகரித்தபடியே உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து, மம்சாபுரம் மல்லி, வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில், நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி மகளிர் காவல் நிலையம் போன்ற காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற விபத்துகள் தொடர்பாக கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் சுமார் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அதேபோல் உட்கோட்ட பகுதிகளில் 181 சிறு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் 260 பேர் காயமடைந்துள்ளனர். எவ்வளவு தான் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. எவ்வளவுதான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிமீறல்கள் நடந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக வேகமாக வாகனங்களை ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வானங்கள் ஓட்டுதல் என போக்குவரத்து விதிமுறைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த அந்தந்த பகுதி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் கடந்த 11 மாதங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்ட பகுதியில் சுமார் 80 பேர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வாகனங்களில் செல்பவர்கள் தங்கள் குடும்பத்தினரை நினைத்துக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அனைவரும் அவசியம் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செல்ல வேண்டும்.
அவ்வாறு கடைபிடித்தாலே விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் குறையும். காவல்துறையினரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் வாகனங்களில் வருபவர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் இருந்தாலே கண்டிப்பாக விபத்துகளை தடுக்கலாம். உயிரிழப்புகளையும் தடுக்கலாம்’’ என தெரிவித்தார்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 11 மாதங்களில் 80 பேர் விபத்தில் உயிரிழப்பு appeared first on Dinakaran.