சென்னை: ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் மீது அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சட்டப்படி வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்த மாணவர் தேவேந்திரராஜ் (வயது 17) என்பவர் நேற்று தேர்வு எழுதுவதற்காக பேருந்தில் சென்றார். கெட்டியம்மாள்புரம் என்ற இடத்தின் அருகே பேருந்து வந்தபோது, ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து தேவேந்திரராஜை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தேவேந்திரராஜுக்கு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.