ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் பஸ்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் கட்டிடப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ள மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையத்தில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 15 அடிக்கும் அதிகமாக பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து அள்ளப்பட்ட மணல், பேருந்து நிலையத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 19ம் தேதி ஸ்ரீவை. பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் இளம்பகவத், பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன்படி தற்போது ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்கின்றன. இதனால் பொதுமக்களும், பயணிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். கூடுதலாக பஸ்கள் ஊருக்கு வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வியாபாரிகள் தாமாக முன்வந்து கடை முன்பு வாகனங்களை நிறுத்தாதீர்கள் என போர்டுகளை வைத்துள்ளனர். ஆனால் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட மணல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பஸ்களை பேருந்து நிலையத்திற்குள் திருப்ப முடியாமல் டிரைவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பஸ் டிரைவர்களின் சிரமங்களை தவிர்த்து அனைத்து பஸ்களும் எளிதாக பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாலுகா அலுவலகத்தில் இன்று சமாதான கூட்டம்
தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உத்தரவை மீறி புதுக்குடி வழியாக பஸ்கள் சென்று வந்ததை கண்டித்து வரும் மார்ச் 6ம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுமென ஸ்ரீவை. பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை, இன்று (27ம் தேதி) மாலை 4 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது.
The post ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் கட்டிட பணிக்காக குவிக்கப்பட்ட மணல் குவியலை அகற்ற கோரிக்கை: பஸ்கள் சிரமமின்றி வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.