திருவள்ளூர்: ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும் நாட்களில் பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று 15 மீனவ கிராம பிரதிநிதிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் நாளை என்விஎஸ் – 02 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதுபோன்று ராக்கெட் ஏவப்படும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாளை பழவேற்காடு, லைட்ஹவுஸ் குப்பம், கூனங்குப்பம், அரங்கன்குப்பம், திருமலை நகர், வைரவன் குப்பம், கோரைக்குப்பம் உள்பட 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவப்படும்போது மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என தடை விதிப்பதால் வங்கியில் கடன் பெற்று படகுகள் வாங்கி வாழ்வாதாரம் நடத்தி வரும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைகிறோம். கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கும் நாட்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கூறி பழவேற்காட்டைச் சுற்றியுள்ள 15 கிராம மீனவர்களின் கூட்டமைப்பினர் திருவள்ளூர் கலெக்டரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் த.பிரபுசங்கர் உறுதி அளித்தார்.
The post ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும் நாட்களில் பஞ்சப்படி வழங்க வேண்டும்: 15 மீனவ கிராம பிரதிநிதிகள் கோரிக்கை appeared first on Dinakaran.