பெங்களூரு: கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ‘ஹனி டிராப்’ செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க கோரி பேரவையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று காலையில் அவை கூடியதும் கூட்டுறவு துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா பேசியதாவது: கர்நாடக எம்எல்ஏக்கள் சிலர் தங்களது அரசியல் எதிரிகளைபழிவாங்க பெண்களை வைத்து ‘ஹனி டிராப்’ சதி செய்கின்றனர். இந்த சதி வலையில் என்னையும் சிக்க வைக்க முயற்சித்தனர். என்னைப்போல 48 எம்எல்ஏக்களை இலக்கு வைத்து ‘ஹனி டிராப்’ சதி முயற்சி மேற்கொள்ள‌ப்பட்டுள்ளது. சில நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்தும் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 48 எம்எல்ஏக்களை சம்பந்தப்பட்ட பெண்கள் நெருங்கி புகைப்படம், வீடியோஎடுக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.