பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஹனி டிராப் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களை பயன்படுத்தி ஒருவரை பாலியல் சர்ச்சையில் சிக்க வைக்க நடக்கும் முயற்சி ‘ஹனி டிராப்’ எனப்படுகிறது. இத்தகைய ஹனி டிராப் வலையில் சிக்குவதால் அரசியல் பிரமுகர்கள் பலர், தங்களின் அரசியல் எதிர்காலத்தை தொலைத்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நேற்று பேசிய அம்மாநில கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா, "எனக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்தது. நான் மட்டுமல்ல, தேசிய தலைவர்கள், நீதிபதிகள் உள்பட கர்நாடகாவில் கிட்டத்தட்ட 48 முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதில் சிக்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறி இருந்தார்.