காதல் திருமணம் செய்துகொள்ளும் கார்த்தியும் (தர்ஷன்) அனுவும் (அர்ஷா சாந்தினி) சென்னை வேளச்சேரியில் பழைய அடுக்குமாடி வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதேபோல ரமேஷ் (காளி வெங்கட்), விஜி (வினோதினி) வீட்டிலும் நடக்கின்றன. பின்னர் நடக்கும் ட்விஸ்ட்டுகளில் இந்த 2 குடும்பமும் ஒரே அடுக்குமாடி வீட்டில்தான் வசிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால், கார்த்தியும் அனுவும் ரமேஷும் விஜியும் வெவ்வேறு டைம் லைனில் வசிக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் பிரச்சினைகள் எழுகின்றன. இதை எப்படித் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை.
வித்தியாசமான கதைக் களத்தைக் கையில் எடுத்து, அதைத் திகிலாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் எமோஷனல் கலந்தும் இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜ்வேல். முதலில் ஒரு பேய்க் கதை போலவே நகர்ந்து செல்லும் திரைக்கதையில் இது பேய்க் கதை அல்ல என்பது தெரிய வருகிறபோது சுவாரஸியம் பற்றிக் கொள்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அழகாகவும் நகைச்சுவையாகவும் படமாக்கி இருக்கிறார்கள். அதுவும், கண்ணுக்கே தெரியாமல் இரு குடும்பங்களும் அறிமுகமாகிக் கொள்ளும் காட்சியில் சிரிப்பு வெடி. வீட்டை விற்க முயலும் காட்சியும், சிறுவனின் பிறந்த நாள் காட்சியும் கலகலப்பூட்டுகின்றன.