சென்னை: நடப்பு ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் மலேசியாவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் உடன் மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை வைஷ்ணவி சர்மா.
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா பங்கேற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடுகின்றன. 41 போட்டிகள். 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிந்து முதல் சுற்றில் விளையாடுகின்றன. தொடர்ந்து ‘சூப்பர் 6’ சுற்று நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடிக்கின்ற அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெறுகிறது.