சென்னை: “இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் மேம்பாடு மற்றும் அரசின் வருமான உயர்வுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அதானி சாலை போக்குவரத்து குழுமம் ரூபாய் 1692 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இத்தகைய திட்டங்களை அதானி குழுமத்துக்கு வழங்குவதன் மூலம் ஹின்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டுவதற்கு மோடி அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வருகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடியின் ஆட்சியைப் பொறுத்தவரை எழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்டவர்களின் சொத்து பலமடங்கு குவிந்திருக்கிறது. ஹின்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 2023-ல் அதானி குழும முறைகேடுகளை அம்பலப்படுத்தி, அறிக்கை வெளியிட்டது.