கோவை: பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்தனர். கோவை மாநகராட்சி ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவிகள் கவிதா, கனிஹா. இரட்டையர்களான இவர்கள் இருவரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வி எழுதினர். அவர்கள் 2 பேரும் 474 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். கணித பாடத்தில் இருவரும் 94 மதிப்பெண் எடுத்துள்ளனர். இது குறித்து மாணவிகள் கூறுகையில், ‘10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இருவரும் ஒரே மாதிரிதான் தயாராகினோம். இருப்பினும், ஒரே மதிப்பெண் எடுப்போம் என எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு மட்டும் இல்லை, பள்ளி ஆசிரியர்கள், வீட்டில் இருப்பவர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் கணிதத்தில் 94 மதிப்பெண் பெற்று இருப்பதை சிறப்பானதாக பார்க்கிறோம். எங்கள் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை. எங்களது தந்தை தேவாலயத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். கடவுள் ஆசியால் இருவரும் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளோம். 11ம் வகுப்பில் கணிதம்-உயிரியல் பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர். இதேபோல், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இரட்டையர்கள் ஹரிஹரன், செந்தில் நாதன் ஆகியோர் 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இரட்டை சகோதரர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர் ஹரிஹரன் தமிழில் 94, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 83, அறிவியல் 94, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் என பாடவாரியாக எடுத்துள்ளார். மாணவர் செந்தில் நாதன் தமிழில் 83, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 93, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 90 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
‘அப்பா… பாஸாயிட்டேன் மகனே… நானும்தாண்டா…’
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மண்டபசாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் சிலுக்குபட்டியில் தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கவின்குமார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் கவின்குமார், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில், 358 மதிப்பெண்கள் எடுத்து கவின்குமார் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், கவின்குமாரின் தந்தை செந்தில்குமாரும் தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இவரும், 210 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஒரே நேரத்தில் தேர்வு எழுதி தந்தை, மகன் தேர்ச்சி பெற்றது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post 10ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள் appeared first on Dinakaran.